வியாழன், 1 ஜூன், 2017

போராட்டம் – உயிர்ப்பின் சாரம்

தமிழ்நாடு அண்மையில் இரண்டு பெரும் போராட்டங்களை சந்தித்தது.

பொதுவாக தமிழ்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் சாமானிய மக்களின் ஆதரவை பெறுவதில்லை. ஒருவகையில் போராட்டங்களுக்கு எதிரான உணர்வு மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்களைக் கூறலாம். தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள் பெருமளவில் பொதுமக்களின் அதிருப்தியை மட்டுமே எதிர்வினையாக பெறுகிறது.

குறிப்பாக அரசு ஊழியர் சங்கங்கள் நடத்தும் போராட்டங்கள். காரணம் அரசின் மிகப்பெரும்பாலான பணியாளர்கள், மக்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. அதுமட்டுமல்லாமல் அரசுத்துறைகளும், அவற்றின் பணியாளர்களும் தங்களை இந்த நாட்டின் முடிசூடா மன்னர்களாகவும், வரி செலுத்தும் மக்களை கொத்தடிமைகளாகவே நினைக்கின்றன – நினைக்கின்றனர்.  இந்த யதார்த்த நிலையில் அரசு ஊழியர்கள் முன்வைக்கும் மிகவும் நியாயமான கோரிக்கைகள்கூட மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகின்றன.

அரசியல்ரீதியாக நடைபெறும் போராட்டங்களும், போராட்டம் நடத்துபவர்களின் அரசியல் வாழ்க்கையை உறுதி செய்யும் போராட்டமாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன. எதிர்கட்சி நியாயமான ஒரு கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினால்கூட, போராட்டம் நடத்தும் எதிர்கட்சியின் கடந்தகால வரலாறுகள் மீட்டெடுக்கப்பட்டு போராட்டம் கொச்சைப் படுத்தப்படுகிறது.

இவ்வாறாக நாட்டில் நடக்கும் எந்த ஒரு போராட்டமும் இந்த நாட்டின் பெரும்பாலான மக்களை, போராட்டக்காரர்களுடன் இணைத்துப் பார்ப்பதற்கோ, ஆதரவை அளிப்பதற்கோ வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இதைத்தான் ஆட்சிப்பொறுப்பில் இருப்போரும், அவர்களின் ஆதரவு சக்திகளும் விரும்புகின்றன.

இந்த நிலையில்தான்  தமிழ்நாடு அண்மையில் இரண்டு போராட்டங்களை சந்தித்தது.

ஒரு போராட்டம் நிறைவடைந்து விட்டது. அடுத்த போராட்டம் இந்த நிமிடம்வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முதல் போராட்டம் கோலாகலமாக ஆரம்பித்து சோகத்தில் முடிந்த ஜல்லிக்கட்டு போராட்டம். அடுத்ததோ தன்னிச்சையாக ஆங்காங்கே நடைபெறும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம்.
இந்த இரண்டு போராட்டங்களுக்கும் இடையே எந்தவிதமான ஒற்றுமையும் காண முடியாது.

இரண்டு போராட்டங்களும் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நடந்திருக்குமா என்பது சந்தேகமே! இந்த விமர்சனம் போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்துவதாக புரிந்து கொள்ளக்கூடாது. போராட்டங்களை புரிந்துகொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ இயலாத ஆளும்வர்க்க சக்திகளின் உளவியல் மீதான விமர்சனமாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.


***

ஜல்லிகட்டு போராட்டம் என்பது ஒரு புதிய போராட்ட வடிவம் என்று பலரும் கருத்து கூறினார்கள். ஆனால் இதற்கான விதைகளைத் தூவியது “மே 17” இயக்கம் என்று கூறலாம். தமிழர் வரலாற்றில் மறக்க இயலாத நந்திக்கடல் போரைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் அந்த இயக்கம் நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சிகளை ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன்னோடியாக கூறலாம்.

மே 17 இயக்கம் நடத்திய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் எந்தவித கட்சி அரசியலும் இல்லாதவர்கள். அவர்களுக்கு வேறு அரசியல்ரீதியான கருத்துகள் இருக்குமா என்பதுகூட ஐயமே! ஆனாலும் அவர்களிடம் மிச்சமிருக்கும் மனித உணர்வுகளே அவர்களை மெரீனா கடற்கரையில் திரளத் தூண்டியது. அரசியலற்ற மக்களை அரசியல் படுத்துவதற்கான நோக்கத்தில் அந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டிருக்கலாம்.

(மே 17 இயக்கம் ஆண்டுதோறும் நடத்தும் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு, இந்த 2017ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி நிகழ்வை நடத்த முயற்சித்த திருமுருகன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் மீது, குண்டர் தடுப்புச் சட்டம் ஏவப்பட்டு, கிடப்பில் இருந்த பல வழக்குகள் ஏவப்படுகின்றன. அரசின் கருத்துக்கு எதிர்க்கருத்து கூறுவோருக்கு இதுதான் நிலை என்ற எச்சரிக்கை மக்களின் மனதில் பதியவைக்கப்படுகிறது. )

மேற்கண்ட நிகழ்ச்சிக்கு வந்தவர்களின் மனநிலையோடு இருந்தவர்களே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வந்தனர் என்று துணிந்து கூறலாம். ஜல்லிகட்டு போராட்டத்திற்கு வந்த மக்களில் பெரும்பாலானவர்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். இன்னும் சொல்லப்போனால் கட்சி அரசியல் மீது சலிப்பும், அலுப்பும் அடைந்தவர்கள். பல்வேறு பிரச்சினைகளில் தங்கள் நியாயமான விருப்பங்கள் புறக்கணிப்படுவதால் நொந்து போயிருந்த மக்களுக்கு ஜல்லிக்கட்டு போராட்டம், இந்த அரசியல் - சமூக அமைப்பு மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. பல்வேறு மக்கள் பிரச்சினைகளின் குறியீடாக ஜல்லிக்கட்டு உருவகிக்கப்பட்டது. குறிப்பாக மாநில மக்களின் வாழ்க்கையில், மத்திய அரசு அத்துமீறி தலையிடுவதாக கருதிய மக்களின் வெளிப்பாடாகவும் ஜல்லிக்கட்டு போராட்டம் காட்சி அளித்தது.

ஜீன்ஸ் அணிந்த, ஆங்கிலம் கற்றறிந்த இளைஞர்களும், யுவதிகளும் போராட்டத்தில் நிறைந்திருந்தனர். இவர்களில் எத்தனை பேர் ஜல்லிக்கட்டை நேரில் பார்த்திருப்பார்கள் என்பது சந்தேகமே! மிகச்சரியாக அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் சுமார் நூறுக்கும் அதிகமான விவசாயிகள் அகால மரணமடைந்த துயரத்தைவிட, ஜல்லிக்கட்டு நடக்காத துயரத்திற்காக அந்த இளைஞர்கள் அதிக முழக்கங்களை எழுப்பினர்.

தொலைகாட்சிகளின் டிஆர்பி வளர்ச்சிக்கான ஒரு அம்சமாக இந்தப் போராட்டம் பயன்படுத்தப்பட்டது என்பதையும் மறந்துவிட முடியாது. தடைகடந்து நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று உயிரிழந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர். ஆனால் அது குறித்தெல்லாம் பேசுவது மறத்தமிழனின் வீரத்திற்கு இழுக்காகிவிடக்கூடும்.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற, அன்றைய தமிழக அரசியல் சூழலில் காவல்துறையும் கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஆர்வக்கோளாறு காவலர்கள் வெளிப்படையாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒருநாள் நாயகன் ஆனார்கள். மாநில அரசு விரும்பும்வரை அனுமதிக்கப்பட்ட அந்தப் போராட்டம், மத்திய அரசு விரும்பாத ஒரு நாளில் எதிர்பார்த்தபடியே முறியடிக்கப்பட்டது.

ஆண் காவலர்கள் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களை கொளுத்த, பெண் காவலர்கள் சாலையோர குடிசைகளுக்கு கொள்ளி வைத்தார்கள். நடுக்குப்பத்தில் காவல்துறையினரின் வன்முறையை நேரலையில் செய்தி வழங்கிய தொலைகாட்சி நிறுவனம் மிரட்டப்பட்டு, செய்தியாளர் உடனடியாக நடுக்குப்பத்திலிருந்து வெளியேறினார்.

“வாடிவாசல் பார்க்காமல், வீடு வாசல் திரும்ப மாட்டோம்!” என்று முழக்கம் இட்ட இளைஞர்களும், யுவதிகளும் வாழ்க்கையில் உருப்படும் வழியைப் பார்க்க அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி விட்டார்கள்.

போராட்டத்தை இறுதிவரை நடத்தி, காவலர்களின் இரும்புக் கரங்களில் சிக்கிய இளைஞர்களுக்கு ஆதரவு கொடுத்த, ஜல்லிக்கட்டோடு எந்த தொடர்பும் இல்லாத மீனவ மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஒரு போராட்டம் நிறைவைக் கண்டது.


***

நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடுத்த வழக்கை ஏற்று நெடுஞ்சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு அடுத்த போராட்டத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மூடப்பட்ட கடைகளால் ஏற்பட்ட வருவாய் இழப்பை  ஈடு செய்ய வேறு இடங்களில் கடைகளை திறக்க அரசு முற்பட்டது. ஏற்கனவே மதுபானக்கடைகளால், அந்தக் கடையின் வாடிக்காளர்களான பெருங்குடி மக்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இந்த இடைவெளி போராட்டத்திற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆங்காங்கே பெண்கள் தன்னியல்பாக திரண்டு போராடத் தொடங்கினர். நகர நாகரீகம் பெற்ற பெண்களோ, கல்வி கற்ற பெண்களோ இந்தப் போராட்டங்களில் பெருமளவில் ஈடுபட்டதாக தெரியவில்லை. கிராமத்தில் வசிக்கும், அதிகம் படிப்பறிவில்லாத, பெரும்பாலும் உடல் உழைப்புத் தொழில் செய்யும் பெண்களே இந்த போராட்டங்களை முன்னின்று நடத்தினார்கள்.





இந்தப் பெண்கள்மீதும் காவல்துறை வழக்கம்போல வன்முறை வெறியாட்டம் நடத்தியது. திருப்பூரில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி ஒரு பெண்ணை அறைந்தார். இந்த சம்பவத்தை ஒளிப்பதிவு செய்த செய்தியாளரை மற்றொரு காவல்துறை அதிகாரி தாக்கினார். எனினும் இதையெல்லாம் மீறி அந்தக் காட்சி உலகத்தமிழர்களின் காட்சியை எட்டியது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டிருக்கலாம். இந்த வழக்குகளை சந்திக்க இந்தப் பெண்கள் எதிர்காலத்தில் சொல்லொணா துயரங்களை அனுபவிக்க நேரலாம். இதெல்லாம் போராடும் பெண்களுக்கு தெரியாமலில்லை. ஆனாலும் அவர்கள் துணிந்தே இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மது என்ற அரக்கனுக்கு அடிமையான தங்கள் குடும்பத்து ஆண்கள் செய்யும் அராஜகத்தை தடுக்க – தவிர்க்க, காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் அராஜகத்தை சந்திக்க அந்தப் பெண்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

நகர நாகரீகமோ, உயர்கல்வியோ, நவீன வேலைவாய்ப்புகளோ கற்றுத்தராத போராட்ட உணர்வுகளை கிராமப்புற மக்களின் யதார்த்த வாழ்வு கற்றுத் தந்தது.

நகர்ப்புற பெண்களைவிட அதிக அளவில் தேர்தலில் வாக்களிப்பது கிராமப்புற பெண்கள்தான்.  அதிமுக என்ற கட்சியின் மிகப்பெரிய வாக்குவங்கியும் இந்த கிராமப்புற பெண்கள்தான். தங்கள் வீட்டுக்கு வந்த இலவச வண்ணத்தொலைகாட்சிப் பெட்டிக்கும், விலையில்லா கிரைண்டர், மிக்ஸி, ஃபேன் ஆகிய பொருட்களுக்கு தாங்கள் கொடுத்த விலைதான் டாஸ்மாக் கடைகளுக்கு தங்கள் வீட்டு ஆண்கள் காலமெல்லாம் செலுத்திய வரி என்பது அந்த பெண்களுக்கு இப்போதும் முழுமையாக தெரிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே!

ஆனாலும் அந்தப் பெண்கள் போராடினார்கள். இந்தப் போராட்டம் முழு வெற்றி அடையுமா? என்பது தெரியாது. ஆனால் மக்களிடம் காணாமல் போயிருந்த  போராட்ட உணர்வை மீட்டெடுத்ததில் இந்தப் போராட்டம் மிகமுக்கிய பங்கு வகிக்கும்.


***

இதற்கிடையில் மின்னல் போல் வந்து சென்ற மற்றொரு போராட்டம், போக்குவரத்துத்துறை பணியாளர்கள் நடத்திய இரண்டரை நாள் போராட்டம். இந்தப் போராட்டத்தின் வெற்றி-தோல்விக்கு அப்பாற்பட்டு இந்தப் போராட்டம், மக்களின் மனதில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகவும் முக்கியமானவை.

சமூக ஊடகங்களிலும், தனியார் தொலைகாட்சிகளிலும் போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயம் பரவலாக விவாதிக்கப்பட்டது. மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஐடி துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவான குரலை வெளிப்படுத்தினர். ஒரு தனியார் தொலைகாட்சி செய்தியாளருக்கு பேட்டி அளித்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், “பேருந்துகள் இயங்காததால் மக்களின் பாதிப்பு உண்மைதான். அதே நேரம் பணிஓய்வு பெற்ற போக்குவரத்து பணியாளரின் ஓய்வுக்கால பலன்களை பல ஆண்டுகாலமாக அரசு தராத பாதிப்பை ஒப்பிடும்போது பொதுமக்களின் பாதிப்பு குறைவுதானே!” என்று நியாயம் பேசினார். 

இவ்வகையில் போராடும் மக்கள் பிரிவினரின் பிரச்சினையை, போராட்டத்திற்கு தொடர்பற்ற – போராட்டத்தால் பாதிக்கப்படும் மக்கள் பேசும் இந்த புதிய போக்கு சாமானிய மக்களின் சிந்தனைப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

மேற்குறிப்பிட்ட இந்த மூன்று போராட்டங்களும் ஜெயலலிதா என்ற நபர் இருந்திருந்தால் நடந்திருக்குமா என்பது பலருக்கும் தோன்றும் கேள்வி. நடந்திருக்காது என்பதே உண்மை! ஆனால் இந்த உண்மை ஜெயலலிதா என்ற ஆளுமைக்கு எந்த பெருமையையும் தருவதில்லை. மாறாக மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிக்காத, ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஒரு நபர் என்ற பெயர்தான் பதிவு செய்யப்படும்.

ஜெயலலிதா மட்டுமே போராட்டத்திற்கு எதிரானவர் அல்ல. ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் அனைவருக்குமே மக்களின் போராட்டங்கள் என்பவை அச்சுறுத்தும் துர்க்கனவுகளே! தங்கள் ஆட்சியை கவிழ்க்க நடக்கும் சதியாக இந்தப் போராட்டங்களை பார்க்கும் ஆட்சியாளர்கள் என்ன விலை கொடுத்தேனும் போராட்டங்களை ஒடுக்க முனைவதே உலக வரலாறு. இதில் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களோடு இணைந்து போராடும் அதே அரசியல் கட்சிகள்தான், ஆளும்கட்சியாகும்போது போராட்டக்காரர்களை தேச விரோதிகளாக – சமூக விரோதிகளாக சித்தரிப்பதோடு, அவர்களின் போராட்டங்களை “இரும்புக் கரம்” கொண்டு அடக்கவும் முனைகின்றன என்பது வரலாற்றின் குரூர நகைச்சுவை.


***

ஆனால் போராட்ட உணர்வுகளை அத்தனை சுலபமாக அணைத்துவிட முடியாது. ஏனெனில் அது உயிர்ப்பின் சாரம். போராடுவதன் மூலமாகவே இந்த உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன. இனப்பெருக்கத்தைப் போலவே, போராட்ட உணர்வும் அனைத்து உயிர்களின் மரபணுவில் இயற்கை பொதிந்து வைத்த வாழ்வியல் கோட்பாடு.

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும், மற்றொரு உயிரினத்தை உட்கொண்டே தம் வாழ்வின் நாட்களை நீடிக்கச் செய்கின்றன. இதுதான் உயிர்ப்பின் ரகசியம். இந்நிலையில் போராட இயலாத அனைத்து உயிரினங்களும் அழிவதே இயல்பு. இதைமீறி வாழும் அனைத்து உயிரனங்களும் போராட்டங்களின் ஊடாகவே தம்மை வாழ்வித்துக் கொள்கின்றன. சிறு செடிகள், பூச்சிகள் முதல் மிகப்பெரும் உயிரினங்கள் வரை போராடாமல் வாழ இயலாது. இந்த நிலையில் மனிதர்கள் மட்டும் போராடாமல் வாழ இயலும் என்று கனவு காண இயலாது.

போராட்டங்களை கையாள்வது என்பது இயலாத ஒன்றல்ல, மக்கள் சார் ஆட்சியாளர்களுக்கு. மக்களுக்காக நடைபெறும் ஆட்சியாளர்கள், போராட்டங்களை இயல்பான ஒன்றாகவே கருதுவர். போராடும் மக்களோடு மனசாட்சியுடன் உரையாடுவதன் மூலம் பொதுநலன் காக்க முனைவர். போராட்டங்களின் காரண்த்தை அறிய முயற்சிக்காமல், போராட்டக் காரர்களை ஒடுக்கும் ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சியே!

இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக